திருவொற்றியூரில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரைமட்டம்

திருவொற்றியூர் பகுதியில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரை மட்டமானது.  சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம் உள்ளது. இங்குள்ள D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது.…

திருவொற்றியூர் பகுதியில் குடிசைமாற்று வாரிய கட்டடம் இடிந்து தரை மட்டமானது. 

சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கிராமத்தெரு குடிசைமாற்று வாரிய கட்டடம் உள்ளது. இங்குள்ள D பிளாக் கட்டடத்தில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், இன்று காலை கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகி கட்டடம் இடிந்து தரை மட்டமானது.

மக்கள் முன்கூட்டியே வெளியேறியதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், இடிந்து விழுந்த கட்டடம், பழமையான கட்டடம்  எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அரசு தேவையான உதவிகளை செய்யும் எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய திருவொற்றியூர் கே.பி.சங்கர், இடிந்து விழுந்த குடியிருப்பில் வசித்தவர்கள் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டு, உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த குடியிருப்பானது 1993ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறியதால் கட்டடத்தில் இருந்த அவர்களது அனைத்து உடைமைகளையும் இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். உடனடியாக அரசு தங்களுக்கு மாற்று வீடு வழங்க வேண்டும் எனவும் மேலும் நிவாரணம் அளிக்க வேண்டும் எனவும் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.