ஒசூரில் 16 ஆவது ஆண்டாக தலைமேல் தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் விநோத நேர்த்தி கடன் செலுத்தினர்.
ஓசூர் ஜிகேடி நகரில் உலக மக்கள் நலனுக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டி குறும்பர் இன மக்களின் குல தெய்வங்களை ஊர்வலமாக எடுத்து வந்து தலைமேல் தேங்காய்களை உடைத்து விநோத நேர்த்தி கடன் செலுத்தினர்.
முன்னதாக குறும்பர் இன மக்கள் தங்களது குல தெய்வங்களான ஸ்ரீ குடியாப்பன்,ஸ்ரீ லிங்கம்மன், ஶ்ரீ சம்பரள்ளி,ஶ்ரீ கோடில் ராய் உள்ளிட்ட தெய்வங்களைத் தலை மேல் சுமந்தபடி கலாச்சார கலை நிகழ்ச்சிகளாகிய டொள்ளு குனித, வீரகாசே, வீரபத்திர குனித, கம்சாளே, ஆகிய நடனங்களுடன் ஊர்வலமாகக் கொண்டு வந்தனர்.
பின்னர் ஜிகேடி நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தலைமேல் தேங்காய்கள் உடைக்கும் வினோத திருவிழா நடத்தப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தேங்காய்களைத் தலைமேல் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டனர்.
மேலும் அங்கிருந்தவர்களுக்குச் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திக் கொண்டனர். இந்த திருவிழாவில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதி கிராம பொதுமக்கள் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான குறும்பர் இன மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.







