நரபலிக்கு முன்பே ஒரு கொலை செய்த கொடூரம் – கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி…

கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் கைதான பெண் அளித்த வாக்குமூலத்தில் ஏற்கனவே ஒரு கொலை செய்து மாமிசத்தை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னர் இந்த வழக்கில் முகமது ஷாபி, பகவல்சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் அவர்களிடம் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 

எவ்வாறு நரபலி கொடுத்தோம் என்றும், நரபலிக்குக்கு முன்பு இரண்டு பேரையும் எவ்வாறு சித்தரவதை செய்தோம் என்றும் கைதானவர்கள் தெரிவித்திருப்பது காவல்துறையையே நடுங்கவைத்துள்ளது. இதையடுத்து, கைதான மூன்று பேரிடம் காவல்துறையினர் தனிதனியாக விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து வருகின்றனர். மேலும் மூன்று பேரும் அளிக்கும் தகவல்கள் ஒன்று போல இருக்கிறதா? என்பதை பரிசோதிப்பதற்காகவும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், தற்போது மேலும் அதிர்ச்சியூட்டும் ஒரு வாக்குமூலம் கிடைத்துள்ளது. இரண்டு பெண்களையும் நரபலி கொடுப்பதற்கு முன்பு ஷாபி அடிக்கடி பகவல் சிங்கின் வீட்டுக்கு வந்து சென்று உள்ளார். அப்போது, எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் ஏற்கனவே கொலை செய்துள்ளார். அந்த மனித மாமிசத்தை விற்பனை செய்ததில் 20 லட்சம் ரூபாய் வரை கிடைத்துள்ளதாகவும் ஷாபி தெரிவித்ததாக லைலா வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது தொடர்பாக ஷாபியிடம் விசாரித்த போது, தான் லைலாவை நம்ப வைப்பதற்காகவே அவ்வாறு கூறியதாக தெரிவித்து உள்ளார். ஆனாலும் போலீசார் ஷாபி கூறியதை நம்ப வில்லை. இதனால் சமீபத்தில் எர்ணாகுளத்தில் காணாமல் போன பெண்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே ஷாபிக்கு மேலும் பெண்களின் பெயரில் 2 போலி பேஸ்புக் கணக்குகள் இருப்பது தெரியவந்து உள்ளது.

 

சஜ்னா, ஸ்ரீஜா என்ற பெயரில் இந்த கணக்குகள் உள்ளன. ஏற்கனவே ஸ்ரீதேவி என்ற போலி பெயரில் தொடங்கிய பேஸ்புக் கணக்கில் இருந்து தான் பகவல் சிங்கை ஷாபி ஏமாற்றினார். அதேபோல இந்த கணக்குகளில் இருந்தும் ஷாபி யாரையாவது ஏமாற்றியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். லைலா கூறிய இந்ததகவல் போலீசுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.