இந்தியாவில் அதிகரிக்கும் குரூர கொலைகள் – மனிதாபிமானம் மறைகிறதா?

உறையச் செய்யும் குரூரக் கொலை சம்பவங்கள் சமீபத்தில் எத்தனை நடந்துள்ளன என்பது பற்றி விரிவாகக் காணலாம். நவீன அறிவியல் புரட்சி, தொழில்நுட்பம் அபார வளர்ச்சி என பல்வேறு வகையிலும், மனிதனின் முன்னேற்றம் சென்றுகொண்டிருக்கும் சூழ்நிலையிலும்…

உறையச் செய்யும் குரூரக் கொலை சம்பவங்கள் சமீபத்தில் எத்தனை நடந்துள்ளன என்பது பற்றி விரிவாகக் காணலாம்.

நவீன அறிவியல் புரட்சி, தொழில்நுட்பம் அபார வளர்ச்சி என பல்வேறு வகையிலும், மனிதனின் முன்னேற்றம் சென்றுகொண்டிருக்கும் சூழ்நிலையிலும் மனிதனின் இயல்பு குணங்கள் மாறி கற்காலத்தை நோக்கி செல்கிறோமோ என்ற ஐயத்தை உருவாக்கி உள்ளது சமீபகாலமாக இந்தியாவில் நடந்துள்ள குரூர கொலை சம்பவங்கள்.

காதலித்து, 2 ஆண்டுகளுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பமும் நடத்தி, நவீன வார்த்தையில் கூறுவதென்றால் லிவிங் டுகெதர் எனப்படும் வாழ்க்கை வாழ்ந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறிய காதலி ஷ்ரத்தா வாக்கர் என்பவரை அடித்தே கொலை செய்ததுடன் அவரது உடல்பாகங்களை 35 துண்டுகளாக மரத்துண்டுகளைப்போல் வெட்டி, பிரிட்ஜில் பாதுகாத்து, இரவில் உடல் பாகங்களை வீசி வந்த காதலன் அப்தாப் பூனாவாலா என்பவரின் கொடூர செயல் அனைவரையும் உலுக்கிவிட்டது.

இந்த கொடூர சம்பவம் பொதுமக்கள் நினைவில் இருந்து மறைவதற்குள் உத்தரபிரதேச மாநிலத்தில் இளம் பெண் ஆராதனா பிரஜாபதி தன் முன்னாள் காதலனை நம்பி சந்திக்க சென்றபோது அவரையும் அடித்தே கொலை செய்து உடல் பாகங்களை துண்டாக்கி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் சென்ற காதலன் பிரின்ஸ் யாதவின் குரூர செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதேபோல மேற்குவங்க மாநிலத்தில் ஓய்வு பெற்ற கடற்படை வீரரான உஜ்வல் சக்கரவர்த்தியை அவரது மனைவி ஷியாமலியும், மகனும் சேர்ந்து கொலை செய்து 6 துண்டுகளாக வெட்டி சாக்குப்பையில் போட்டு உடல் பாகங்களை வீசிச்சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த செப்டம்பர் மாதம் கோவை மாவட்டம் சூரம்பட்டி பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் சுகாதார பணியாளர்கள் குப்பைகளை பொறுக்கும்போது குப்பையோடு, குப்பையாக ஆணின் கை மட்டும் தனியாக கிடந்தது. இதை வைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி மூலம் போலீசார் ஆய்வு செய்ததில் கொலை செய்யப்பட்டது அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் என கண்டுபிடித்தனர். இந்த கொலையை செய்தது யார் என தீவிரமாக விசாரித்தபோது பிரபுவிற்கு, அதே பகுதியில் அழகு நிலையம் நடந்துவரும் கவிதாவுக்கும் உறவு இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது, தாங்கள் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை காட்டி பிரபு பணம்கேட்டு மிரட்டியதால் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி குப்பைத்தொட்டியில் வீசியதாக கூறினார். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தையே பரபரப்பாக்கு உள்ளாக்கியது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுனர் ராம்மை அவரது நண்பர்களே கண்மாய் பகுதிக்கு அழைத்துச்சென்று வெட்டி கொலை செய்ததுடன், அவரது கழுத்தையும் அறுத்து அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த குரூர கொலைக்கு காரணம் குற்றவாளி காதலித்து திருமணம் செய்தபெண்ணை பிரித்ததுடன், அந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகியது.

கடந்த 13ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் கீழக்குப்பம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி தனது மனைவி வள்ளி, 4 மகள்கள், ஒரு மகன் ஆகியோரை மரம் வெட்டும் கோடரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு, தானும் உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இவ்வாறு தொடர்ச்சியாக நடக்கும் குரூர கொலைகள் நாம் எதைநோக்கி செல்கிறோம் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு குரூர மனிதன் ஒளிந்துகொண்டிருப்பான் என கூறுவதுண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது இந்த குரூரம் வெளியாகும். இருப்பினும் சமீபகாலமாக நடக்கும் குரூர கொலைகள் மனிதனின் மனநிலையை முற்றிலும் மனிதாபிமானம், அன்பு, பாசம் ஆகிய குணங்களின் இருந்து முற்றிலும் மாற்றிவிட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தான் உயிருக்கு உயிராக வளர்த்த குழந்தைகள், மனைவி, மகன் ஆகியோரை கோடாரியால் துடிக்க, துடிக்க வெட்டி கொலை செய்யு அளவிற்கு மனிதனின் மனிதாபிமானம் செத்துவிட்டதோ என்றே தோன்றுகிறது. இதற்கு என்ன காரணம் என யோசிக்கும்போது, செல்போன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் குடும்பம், உறவு, பாசம் ஆகியவற்றை தொலைத்துவிட்டு தனிமை உணர்வை ஒவ்வொருமனிதனுக்கும் ஏற்படுத்தி வருகிறது. இந்த தனிமை உறவு மற்றும் செல்போன் வளர்ச்சி ஆகியவை மனிதனின் மனிதாபிமான குணத்தை முற்றிலும் மாற்றி குரூரம் கொண்டவராகவும், பற்று, பாசம் இல்லாத மனிதனாகவும் மாற்றிவருவதாகவே தோன்றுகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.