வாழப்பாடி அருகே 17 வயது சிறுமியை காதலித்தவரை கொலை செய்த அ17 வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள துக்கியாம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (23) இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மே 17ம் தேதி மாலை தூக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் பைக்குடன் கீழே விழுந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சக்திவேலின் தாய் அஞ்சலம் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்திவேலை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையின் பின்னணியில் சக்திவேல் 17 வயது சிறுமியை காதலித்தது தெரியவந்தது.
காதல் விவகாரம் சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவர, சக்திவேலை எச்சரித்து சிறுமியுடனான காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். மே17ம் தேதி இரவு சக்திவேல் பைக்கில் சென்ற போது சிறுமியின் அண்ணன் சதீஸ்குமார் அவரது உறவினரான 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் சக்திவேலை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளனர்.
அவரை சரமாரியாக தாக்கிவிட்டு விபத்து நடந்தது போல் பைக்கினை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஸ்குமார், 17 வயது சிறுவன், மைக்கேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
– அனகா காளமேகன்






