உடலில் தீவைத்துக் கொண்டு சாகச திருமணம் செய்துகொண்ட ஹாலிவுட் ஸ்ட்ண்ட் கலைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமணம் என்றாலே அதில் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்களைக் கொண்டு ஆடிப் பாடுவது, வெவ்வேறு ஊர்களின் பிரபலமான உணவுகள் அல்லது இயற்கை உணவுகளைப் பரிமாறுவது, மரக்கன்றுகளை உறவினர்களுக்கு அளிப்பது என எதில் எல்லாம் வித்தியாசம் காட்ட முடியுமோ அதையெல்லாம் முயற்சித்து வருகின்றனர் நம் மக்கள். அந்த வகையில், ஹாலிவுட் ஸ்டண்ட் தம்பதிகள் செய்துள்ள செயல் அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹாலிவுட்டில் ஸ்டண்ட் கலைஞர்களாகப் பணியாற்றி வரும் காதல் ஜோடி உடலில் தீ வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. கேப் ஜெசோப் , ஆம்பிர் பாம்பிர் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், தங்களுடைய திருமணத்தை வித்தியாசமான முறையில் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து, தேவாலயத்தில் திருமணத்தை முடித்து வெளியே வந்த இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் புரிந்தனர். உரிய பாதுகாப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த தீ வைக்கும் நிகழ்வு மிகவும் பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சாகச சம்பவத்தை திருமண புகைப்படக் கலைஞர் ருஷ் பவல் டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.








