தனியார் பழுது நீக்கம் பணிமனைக்கு அங்கீகாரம் வழங்க ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு தானியங்கி பணிமனை பொறியாளர். பணி மேற்பார்வையாளர் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் அரசு வாகனங்களைப் பழுது நீக்கும் அரசு தனியாங்கி பணிமனை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பழுது நீக்கும் பணியினை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனியார் பழுது நீக்கும் பணியை நடத்தி வரும் நிலையில் அரசு வாகனங்களைப் பழுது நீக்கும் பணிக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்து உள்ளார். வெங்கடேசன் இருமுறை விண்ணப்பித்த நிலையிலும் அங்கீகாரம் வழங்காமல் தட்டிக் கழித்து உள்ளார். இதை தொடர்ந்து வெங்கடேசன் மூன்றாவதாகக் காஞ்சிபுரம் அரசு தானியங்கி பணிமனை பொறியாளர் மோகன் ஆய்வு மேற்கொண்டு 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினால் அனுமதி வழங்குவதாகத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து வெங்கடேசன் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்துவிட்டு இன்று லஞ்ச பணம் 30 ஆயிரத்தை சிறுகாவேரி பக்கத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனை அலுவலகத்திற்குத் தானியங்கி பொறியாளர் மோகனிடம் கொடுக்க வந்துள்ளார். மோகன் லஞ்சப்பணம் 30 ஆயிரத்தை பணிமனை பொறுப்பாளர் முரளியிடம் கூறியுள்ளார்.
லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட முரளி தானியங்கி பொறியாளரிடம் எடுத்துச் சென்றுகொடுத்த பொழுது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் உள்ளே நுழைந்து பணத்துடன் இருந்த இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
மேலும் தானியங்கி பொறியாளர் மோகன், பணிமனை பொறுப்பாளர் முரளி ஆகிய இருவர்மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-அனகா காளமேகன்







