பிரேசிலில் ஏரியில் படகு சவாரி செய்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராட்சத பாறை விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் மினாஸ் கெரிஸ் மாநிலத்திலுள்ள கேபிடோலியோ பள்ளத்தாக்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து இயற்கையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ராட்சத பாறையின் ஒரு பகுதி இடிந்து படகில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக வெளியான வீடியோவில் பாறைகள் சரிந்து விழத் தொடங்குகின்றன. அதனைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் அபாயக் கூச்சலிடும் நிலையில், நொடிப்பொழுதிற்குள் கீழே விழுந்து 2 படகுகளை நொறுக்குகிறது பாறை. அதன்பிறகு ராட்சத அலைகளும் எழும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 32 பேர் காயமடைந்ததாகவும், அதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வார இறுதி நாட்களில் 5,000 பேர் வரையும், விடுமுறை நாட்களில் 30,000 பேர் வரையிலும் சுற்றுலா வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக இப்பகுதியில் மழைபெய்து வந்துள்ளது. அதன் காரணமாகவே பாறை இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.