மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தொடர்பாக உயர்மட்டக் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு இதுவரை 31 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிரதமரிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது, மாவட்ட அளவில் சுகாதார உட்கட்டமைப்பை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர், சுகாதார உள்கட்டமைப்பு, கொரோனா பரிசோதனை ஆக்சிஜன் மற்றும் ஐசியூ.படுக்கைகள் கிடைப்பது மற்றும் அவசரகால கொரோனா நிதி ஆகியவற்றில் மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்தும், அங்கு கடைபிடிக்கப்படும் சிறந்த தடுப்பு முறைகள் குறித்தும் விவாதிக்க முதல்வர்களுடனான ஆலோசனை விரைவில் நடைபெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.








