பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுவன் மீது கடப்பா கல் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரம் கிராமத்தில் தம்பிரான்பட்டி வழி செல்லும் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது மனைவி இளவரசி இறந்த நிலையில் 4 வயதில் சுபிராஜ், 9 வயதில் சுபத்ரா, 7 வயதில் சுஷ்மின்ராஜ் என்ற மகனுடம் தனது வீட்டில் வசித்து வருகிறார். இன்று அதே கிராமத்தில் இறப்பு நிகழ்விற்கு சரவணன் சென்றிருந்த நிலையில் வீட்டில் அவரது மூன்று பிள்ளைகளும் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டின் வெளிப்புறத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த கடப்பா கல்லை சிறுவன் சுஷ்மின்ராஜ் இழுத்த போது பாரம் தாங்காமல் சிறுவன் மீது விழுந்துள்ளது. சிறுவன் மீது விழுந்த நிலையில் அடிபட்டு இரத்தம் வழிந்தோடியுள்ளது. அடிபட்டதை அறிந்த சிறுவனின் அக்கா சுபத்ரா கடப்பா கல்லை எடுத்து தம்பியை தூக்க முயன்றுள்ளார்.
பிறகு வீட்டின் அருகே பேசி கொண்டிருந்த தாத்தா பாட்டியிடம் சொல்லி வந்து பார்த்த போது நீண்ட நேரம் இரத்தம் வழிந்தோடியதால் சிறுவன் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







