பண மூட்டையுடன் பிடிபட்ட காங்கிரஸ் MLA-க்கள் மூவர் இடைநீக்கம்

மேற்கு வங்கத்தில் பணமூட்டையுடன் பிடிபட்ட ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் மூவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் –ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான்…

மேற்கு வங்கத்தில் பணமூட்டையுடன் பிடிபட்ட ஜார்கண்ட் எம்எல்ஏக்கள் மூவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் –ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சியில் உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சாப், நமன் பிக்ஸல் கொங்காரி ஆகிய 3 எம்எல்ஏக்கள் 4 சக்கர வாகனம் ஒன்றில் மேற்கு வங்கம் சென்றுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் ஹவுராவில் அவர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போலீசார், வாகனத்தை சோதனையிட்டனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை கைது செய்தனர்.

தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வாகன சோதனயில் ஈடுபட்டதாகவும், அப்போது ஜார்க்கண்ட் எம்எல்ஏக்கள் பயணித்த வாகனத்தில் ஏராளமான பணம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஹவுரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்வாதி பங்காலியா, அதிக அளவில் பணம் கண்டெடுக்கப்பட்டதால் அவற்றை இயந்திரத்தைக் கொண்டு எண்ணும் பணி நடைபெற்று வருவதாகவும், பணி முடிவடைந்த பிறகு எவ்வளவு பணம் என்பது சரியாக தெரிய வரும் என்றும் கூறினார்.

அவர்கள் சுமார் 50 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு வந்ததாகவும், மேற்கு வங்கத்தில் துணிகளை வாங்குவதற்காகவே அந்த பணம் கொண்டுவரப்பட்டதாகவும் எம்எல்ஏ அன்சாரியின் உறவினர் முகம்மது அசாருதீன் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட்டில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியை கவிழ்க்கும் முயற்சி இது என்று முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஜார்க்கண்ட் பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே, மிகப் பெரிய அளவில் பணத்துடன் பிடிபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.