கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களில் 5 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க மருத்துவர்கள் மறுப்பதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாளொன்றுக்கு 10 முதல் 20 மகப்பேறு சிகிச்சைகள் நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் 5 பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், குழந்தைகள் உயிரிழப்பு காரணம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, முறையாக விளக்கமளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் அலட்சியமாக பதிலளிப்பதாகவும், பெண்களுக்கு இயற்கை பிரசவம் செய்யாமல், அறுவை சிகிச்சை செய்வதிலேயே கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.







