பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வீர மரணம்!

ஜம்மு – காஷ்மீர் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் வீர மரணமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக சந்தேகித்த இந்தியா, பாகிஸ்தான் உடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

இதற்கிடையே, கடந்த 7ம்தேதி நள்ளிரவு 1.44 மணியளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் எல்லையில் போர் பதற்றம் நிலவியது.

இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். இதற்கிடையே, உடன்பாட்டை மீறி ஜம்மு & காஷ்மீர் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வான் பாதுகாப்பு படைகள் அவற்றை முறியடித்ததாகவும் தகவல் வெளியானது.

அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் பிஎஸ்எப் (எல்லைப்பாதுகாப்புப்படை) சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் வீர மரணமடைந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.