இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்கான தகுதியை தீர்மானிக்கும் தொடர் என்பதால் இது இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும்.
இதனிடையே முதல் டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
2004-05ம் ஆண்டுக்கு பின்னர் இந்தியாவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. ஆனால் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்தியா அணி 2 டெஸ்ட் தொடர்களை அடுத்தெடுத்து கைப்பற்றி சாதனை படைத்தது.
2012-ம் ஆண்டுக்குப் பிறகு தனது சொந்த மண்ணில் இந்தியா அணி தோற்றதில்லை. அந்தளவுக்கு சொந்த மண்ணில் வலுவாக இந்தியா அணி உள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியாவும் பாட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்க உள்ளன.







