பூஸ்டர் தடுப்பூசி; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயமில்லை

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 655 பேர்…

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவர்களின் மருத்துவ சான்றிதழ் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 655 பேர் ஒமிக்ரான் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் ஜனவரி 10 முதல் செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவரின் சான்றிதழ் கட்டாயம் என சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவர் சான்றிதழ் வேண்டியதில்லை என்றும், தேவையெனில் மருத்துவரின் ஆலோசனையே போதுமானது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல 15-18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவர்கள் கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்போது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அனைத்து நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும், முதல் டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்கு பின்னர் செலுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் மட்டுமல்லாது, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் களப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக கருதப்படுவார்கள் என்றும், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்தான் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்காவில் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படியான சூழலில் இந்தியாவில் மேலும் இரண்டு (CORBEVAX, COVOVAX) தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.