ராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில் தங்குவோர் குறித்த விவரங்களை விடுதி உரிமையாளர்கள் வழங்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் எச்சரித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், துரிதமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தீபக் சுவாச் சிறப்பு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபக் சுவாச், கடந்த நாட்களில் ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் செய்து தப்பித்த குற்றவாளிகளை சிறப்பான முறையில் விசாரணை நடத்தி கைது செய்த காவல்துறையினரை பாராட்டுவதாகவும், ராமேஸ்வரம் ஒரு சுற்றுலாத் தலம் என்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்,
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் விடுதியில் தங்கும் பொழுது உரிய ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்பது குறித்து விடுதி உரிமையாளர்கள் பரிசோதனை செய்து தங்களுக்கு சந்தேகம் இருப்பினும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.








