எழும்பூர் கென்னட் சாலையில் உள்ள மலபாப் மசூதிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
சென்னை எழும்பூர் கென்னட் சாலையில் மலபாப் மசூதி உள்ளது. இந்த மசூதியில் திருமணம் நடைபெற்று அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மசூதியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதோடு நிற்காமல் தனியார் ஹோட்டலிலும் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாக கூறி தொலைப்பேசியை துண்டித்துள்ளார். பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு குறித்து சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து தனியர் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
– இரா.நம்பிராஜன்








