கோவை சிறுமி கொலை : குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் சம்பத்குமார் உறுதி!

தமிழ்நாடு முழுவதும் சிங்கபெண் படை திட்டம் விரைவில் தொடங்க உள்ளது என்று அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “துரிஷ்டமான இந்த நிகழ்வில் துரிதமாக செயல்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை துரிதப்படுத்தப்படும். சூலூர் சிறுமி கொலை வழக்கில் விரைந்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறி இருக்கிறேன். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தர அரசு உறுதியாக உள்ளது.

குற்றம் செய்பவர்களுக்கு பயம் இருக்க வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களுக்கு அந்த சிந்தனையே வரக்கூடாது என்பதற்காக கடுமையான தண்டனைகள் என்பது முதல்வரின் எண்ணமாக இருக்கிறது. அதை நிச்சயமாக முதல்வர் செயல்படுத்துவார். இந்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தருவது எங்களின் கடைமையாக இருக்கும்.

தமிழ்நாடு முழுவதும் சிங்கபெண் படை திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. அதன் மூலம் கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும். சம்பவம் நடந்த இடங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை கடுமையாக இருக்கும். குற்றசம்பவம் அதிகமாக நடைபெறும் இடங்களில் கண்காணிப்பை நாங்கள் தீவிரபடுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.