அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களைக் மீண்டும் இணைப்பது குறித்து பொதுசெயலாளர் முடிவு எடுப்பார் என முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் தலைமை நிலையை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக-வின் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல், அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் துணை பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக தலைமை நிலைய செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்ட பின், கோவைக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதா ஆசியுடனும் ,பொதுகுழு உறுப்பினர்களின் ஆதரவுடனும் ,மக்கள் எதிர்பார்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
30 ஆண்டுகளாக மக்களுக்கு நல்லது செய்த அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதற்கு ஏற்றார் போல் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என கூறினார். பின்னர் அவரிடம் செய்தியாளர்கள் அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவார்களா? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய எஸ்.பி.வேலுமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களைக் மீண்டும் இணைப்பது குறித்து பொதுசெயலாளர் முடிவு எடுப்பார் என விளக்கமளித்தார்.
– இரா.நம்பிராஜன்








