கை வெட்டப்பட்ட நிலையில் தொங்கவிடப்பட்ட சடலம்; விவசாயிகள் போராட்டத்தில் பரபரப்பு

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து…

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிக்கு அருகே ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் இந்த போராட்டத்தினை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு மாநில எல்லையான சிங்கு பகுதியில் இன்று அதிகாலை விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தது.

இதனையறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சோனிபட் போலீஸ் சுப்பிரண்டு ரன்தாவா தெரிவித்துள்ளார். மேலும், சம்பவ பகுதியிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் விசாரணையில், உயிரிழந்த நபர் பஞ்சாப் மாநிலம் டாம் டரன் பகுதியை சேர்ந்த 36 வயது லக்பிர் சிங் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று வீடியோக்கள் பரவி வருகிறது. அதில் நிஹாங்ஸ் எனும் ஆயுதம் ஏந்திய சீக்கியர்கள் லக்பிர் சிங்கை சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மற்றொரு வீடியோவில் லக்பிர் சிங்கின் ஒரு கை வெட்டப்பட்டுள்ளது தெரிகிறது.

லக்பிர் சிங் சீக்கியர்களின் புனித நூலான குரு கிராந் சாஹிப்பை அவமதித்ததாகவும், இதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் காவல்துறை இதனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.