2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.பி. தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கோ.புதூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகநீதி காப்போம் என்கிற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது, அப்போது கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசுகையில் “தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விசிக செயல்பட்டு வருகிறது, விசிக தேசிய அளவில் பரவியுள்ளது, விசிக கொடி விடுதலை கொடியாக உள்ளது, அங்கனூர், சென்னைக்கு அடுத்து என்னை வாரி அனைத்து கொண்டது மதுரை, அரசு வேலைக்காக நான் மதுரைக்கு வந்தேனா அல்லது மக்களுக்காக நான் வேலை செய்ய வந்தேனா எனத் தெரியவில்லை, மதுரை மண் என் வாழ்வில் என்னை மடைமாற்று செய்த மண், மதுரை மண் தான் என்னை பொது வாழ்க்கைக்கு அழைத்து வந்தது, விசிகவின் ஒவ்வொரு முழக்கத்திற்கும் ஒரு பிரச்சினை, பின்புலம் உள்ளது, வாக்கு வங்கியை நிரூபிக்காமல் திமுக, அதிமுக கூட்டணியில் விசிக இடம்பெற்றது, விசிகவை தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திரௌபதி முர்மு, எல்.முருகன் ஆகியோர் பாகன் கையில் இருக்கும் யானை போன்றவர்கள், பாஜக சொல்வதைத் தான் திரௌபதி முர்மு, எல்.முருகன் செய்வார்கள், 2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதலில் அரசியல் அமைப்பு சட்டத்தில் தான் கை வைப்பார்கள், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நாடு விடுதலைக்கு முன்பனா இந்து மகாசபை என்ற இயக்கத்தை வைத்திருந்தார்கள், பெண்கள் பிள்ளைகள் பெறும் இயந்திரம், ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்கிற நிலை இருந்தது, மெல்ல மெல்ல ஆயுதமில்லா ஆயுதமாக வந்தது தான் அரசியலமைப்பு சட்டம், அரசியலமைப்பு சட்டம் தான் சமூகத்திற்குக் கல்வி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என அனைத்தையும் கொடுத்தது எனக்கூறிய அவர், ராமன் இப்படி தான் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, வேத காலத்தில் பிராமணர்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்க முயன்றார்கள், அப்படி உத்திர பிரதேசத்தில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள் எனப் பேசினார்.
அண்மைச் செய்தி: ‘15 வயது சிறுமி கர்ப்பம்; 2 பேர் கைது’
தமிழ்நாட்டில், பிள்ளைகள் கையில் மடிக்கணினி கொடுக்கிறோம், கர்நாடகாவில் காவி துண்டையும், ஜெய்ஸ்ரீராம் கோஷத்தை கற்றுத் தருகிறார்கள், இந்துக்களின் முதல் எதிரியே பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் தான் எனக்கூறிய அவர், இஸ்லாமியரும், கிறிஸ்துவரும் இந்து மதத்துக்கு எதிராகப் பேசவில்லை பின்னர் ஏன் அவர்களைத் தாக்கச் சொல்கிறார்கள், இந்துவாகப் பிறந்த அம்பேத்கரும், பெரியாரும் ஏன் இந்து மதத்தைக் குறை கூறினார்கள்? எனக் கேள்வி இ எழுப்பினார். ஒரே நாளில் அம்பேத்கரின் பேச்சைக் கேட்டு 10 லட்சம் பேர் பௌத்த மதத்தைத் தழுவினார்கள், இங்குள்ள இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் நமது சகோதரர்கள் என்ற நிலையில் அவர்களை மதம் எனக் கூறி மோதலை பாஜக, ஆர்எஸ்எஸ் ஏற்படுத்துவதாகத் தெரிவித்த அவர், சாதி மத மோதலை, தூண்டி சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் இயக்கம் அவை எனக்குறிப்பிட்டார். மேலும், சமூக நீதியைக் காப்பதால் தான் அரசியலமைப்பு சட்டத்தை ஆர்எஸ்எஸ் தூக்கி எறிய முயல்கிறது, இந்திய அரசு தலித்துகளைப் புறக்கணிக்க முடியாது, 30 கோடி தலித் மக்களை மோடியின் பாட்டன் நினைத்தாலும், அமித்ஷா நினைத்தாலும் புறக்கணிக்க முடியாது எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கரை யாராலும் தவிர்க்க இயலாது, அம்பேத்கர் உலகளாவிய தலைவர், நாடாளுமன்றத்தில் தினந்தோறும் உச்சரிக்கப்படும் ஒரே தலைவர் அம்பேத்கர், ஏனென்றால் அவர் தொடாத துறை இல்லை, அம்பேத்கரை தலித் தலைவர் என நினைத்தால் அது அரசியல் அறியாமை எனக் கூறினார். 2024-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசும் போது மனுஸ்ருதியை அரசியலமைப்பு சட்டம் என அறிவித்தாலும் அறிவிப்பர் எனத் தெரிவித்த அவர், ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் அரசியல் ஒட்டுமொத்த தேசம் மற்றும் இந்துக்களுக்கு எதிரானது எனப் பேசினார்.








