பெரம்பலூர் அருகே 15 வயது சிறுமியைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கியவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே குரும்பலூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது தாய்மாமன் சந்திரசேகர் (23) என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கச் சிறுமியின் பெற்றோர் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தால் ஏற்கனவே தன்னை பெண் பார்க்க வந்த கல்பூண்டியை சேர்ந்த நாரணயசாமி மகன் சுரேஷ்குமார் (29) என்பவருடன் அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.41 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்’
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்தபுகாரின்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், சுரேஷ்குமாருக்கும், 15 வயது சிறுமிக்கு வெங்கனூர் பச்சையம்மன் கோயில் முன்பு திருமண நடந்ததும், அதற்கு உடந்தையாக சுரேஷ்குமாரின் பெற்றோர் நாராயணசாமி, சிவக்கொழுந்து, அவரது தம்பி சுந்தர் ராஜ் ஆகியோர் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷ்குமார் மற்றும் நாராயணசாமி, சிவக்கொழுந்து, சுந்தர் ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், சுரேஷ்குமார், நாராயணசாமி ஆகியோரை கைது செய்துள்ளனர்.








