’குலசேகரன்பட்டினத்தில் 2000 ஏக்கர் இடம் தேர்வு’ – இஸ்ரோ தலைவர்

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதல் மையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இதுவரை 2000 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதல் மையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இதுவரை 2000 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், பி.எஸ்.எல்.வி சி-53 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த கட்டமாகச் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்காகப் புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டை அடுத்த மாதம் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் 5 கட்ட சோதனைக்கு பிறகே விண்ணிற்கு மனிதர்களை அனுப்பப்படும் எனக் கூறினார்.

மேலும், சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1 என்ற திட்டம் முழு இறுதி வடிவம் பெற்றுள்ளதாகவும், சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதற்குத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இதற்காக சந்திரயான் 2 திட்டத்தின் தோல்வியில் ஏற்பட்ட காரணம் குறித்து தீவிரமாக ஆய்வுகள் செய்து வருவதாகக் கூறினார். ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் வணிக பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கு முன்பாக, நம்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்த அவர், ஜிஎஸ்எல்வி மார்க் 3 வரும் செப்டம்பரிலும், அடுத்த ஆண்டு ஜனவரியிலும் ஏவ முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘‘பாஜகவின் அரசியல் இந்துக்களுக்கு எதிரானது’ – எம்.பி. தொல்.திருமாவளவன்’

தொடர்ந்து பேசிய அவர், குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதல் மையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட ராக்கெட்டை மீண்டும் பயன்படுத்துவது குறித்து 4 முறை சோதனை செய்துள்ளோம் எனத் தெரிவித்த அவர், தற்போது மழைக் காலம் என்பதால் சோதனையை ஒத்திவைத்துள்ளதாகவும், சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும், தனியார் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ தயார்நிலையில் உள்ளதாகக் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.