தமிழகத்தில் வலுவாக காலுன்றும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக சிறு இயக்கங்களை தங்களது கட்சியுடன் இணைக்கும் முனைப்பில் அக்கட்சி இறங்கியுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தமிழக மக்களுக்கு பெரிதாக போய் சேரவில்லை என்ற கவலை பாஜகவிற்கு நீண்ட நாட்களாக உள்ளது. ஆகவே தமிழ்நாடு முழுவதும் மோடியின் 8 ஆண்டுகள் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்களை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வருகிறார். மேலும் அக்கட்சியின் இளைஞரணியினர் கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை மோடி ஆட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு உரிய அனுமதியில்லை என்றும், மோட்டார் சைக்கிள் பேரணி செல்லும் பாதைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறி தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் மத்தியில் உள்ள மோடி அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிறு இயக்கங்களை கண்டறியும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. அவர்களிடம் பேசிய பாஜக நிர்வாகிகள், நீங்கள் ஏன் தனியாக செயல்படுகிறீர்கள். எங்கள் கட்சியில் இணைந்து செயல்படுங்கள். உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதனையடுத்து அந்தந்த பாஜக மாவட்டத் தலைவர்கள் சிறு இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி, பாஜகவில் இணைத்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பாஜகவில் இணைந்த காவி தமிழர் எழுச்சி இயக்க தலைவர் வேல் கண்ணன் கூறியதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் இயக்கத்தை தொடங்கினோம். இதன் மூலம் கிராம மக்களிடையே மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்த்தோம். மேலும், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் எப்படி பயனடையவது என்பது குறித்து அறியாமையில் இருந்த அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து வந்தோம். ஒவ்வொரு கிராமத்திலும் இதற்கு என நிர்வாகிகளை நியமித்து இருந்தோம். அவர்கள் அந்த கிராம மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு வந்தனர்.
இதனையறிந்த பாஜகவின் நெல்லை மாவட்டத் தலைவர் தயா சங்கர் எங்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார். நீங்கள் தனியாக செயல்பட வேண்டாம். பாஜகவில் இணைந்து விடுங்கள் எனக்கூறினார். அதன் அடிப்படையில் பாஜகவில் இணைந்துள்ளோம் என்றார்.
மேலும், எங்களை போன்ற இயக்கங்களை ஒன்றிணைத்து தமிழகத்தில் வலுவான கட்சியாக பாஜகவை மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நாங்கள் அவரோடு இணைந்து பாஜகவை பட்டி தொட்டியெல்லாம் கொண்டு செல்வோம் என்கிறார் வேல் கண்ணன்.
பாஜகவின் இந்த முயற்சியானது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அறிவுரையின் பேரில் நடப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராமானுஜம்.கி