மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பாஜக மாநில நிர்வாகி எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் மலம் கலந்த நீரில் தூய்மை பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்ய சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அவர் இறந்துவிட்டதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சமூகவலைத்தளங்களில் கடந்த ஜூன் 7-ம் தேதி பதிவிட்டார். இதனைக் கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ளமௌனம் காக்கிறார் எனவும் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டார்.
தொடர்ந்து கடந்த 12-ம் தேதி, மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அவதூறு செய்திகளை பரப்புவதாக எஸ்.ஜி.சூர்யா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஜூன் 16-ம் தேதி சென்னை தியாகராய நகரில் வைத்து எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் எஸ்.ஜி.சூர்யா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட ஒன்றாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராம் சங்கரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் எஸ்.ஜி.சூர்யா தரப்பில் ஜாமின் கோரிய வழக்கு மதுரை மாவட்ட ஒன்றாவது விரைவு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சூர்யாவிற்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும், காவலில் எடுத்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டீலா பானு, எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.







