அரசு மேல்நிலைப் பள்ளி அலுவலகத்திற்குள் அமர்ந்து மது குடித்ததோடு, தலைமை ஆசிரியரின் அறையை உடைத்து லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தொளசம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்து 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை நடந்துவரும் நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
காலையில் வழக்கம்போல பள்ளியை திறக்கச் சென்றபோது தலைமை ஆசிரியர் அறை மற்றும் அலுவலக அறையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தனர். தலைமை ஆசிரியர் அறைக்குள் வைக்கப்பட்டிருந்த லேப்-டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தனர். அலுவலக அறைக்குள் அமர்ந்து மதுகுடித்துவிட்டு பாட்டில்களையும் கொள்ளையர்கள் வீசிச் சென்றுள்ளனர்.
அலுவலக அறையில் வைத்திருந்த மாணவிகளுக்கான நாப்கின் பெட்டிகளை உடைத்து கிழித்து வீசியிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் பள்ளிக்குள் கைவரிசை காட்டியது யார் என விசாரித்து வருகின்றனர்.







