1 ரேஷன் கார்டுக்கு 2 பழமரக்கன்று வழங்கும் திட்டம் – ஜார்கண்ட் முதலமைச்சர் அறிவிப்பு…

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து அரசுகளும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். அதன் வரிசையில், ரேஷன் கடையில் பழ மரக்கன்று…

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் அனைத்து அரசுகளும் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முயற்சியில் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். அதன் வரிசையில், ரேஷன் கடையில் பழ மரக்கன்று வழங்கும் திட்டத்தை அறிமுகம் படுத்தியுள்ளது ஜார்கண்ட் அரசு…

இதன் திட்டத்தை குறித்து தற்போது விரிவாக காணலாம்

பசுமை வனத்தை அதிகரிக்கவும், கிராம மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஜார்கண்ட் அரசாங்கம் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு குறைந்தது இரண்டு பழம் தரும் மரங்களை வழங்க முடிவெடுத்துள்ளது. காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழம் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 24 மாவட்டங்களின் துணை ஆணையர்களுக்கு அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார்.

இதை ரேஷன் விநியோகத்தின் போது. அனைத்து ரேஷன் கார்டு பயனாளிகளுக்கும் குறைந்தது இரண்டு பழம் தரும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இது கிராம மக்களின் வருமானத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலின் தன்மையினை பேணிக்காக்க முடியும் என்றும் ஹேமந்த் சோரன் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஆவணங்களின் படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜார்க்கண்டில் 60 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் பொது விநியோக அமைப்பு கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்லுவதாகவும், இதன்படி பழம் தரும் மரங்களை விநியோகிப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாநில பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை மற்றும் வனத்துறையுடன் விரைவில் விவாதிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் செயலகத்திலுள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை மற்றும் வனத்துறையினருடன் கலந்தாலோசித்து, ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு விரைவில் பழ மரக்கன்றுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் அப்பழமரங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா, இல்லையா என்பதைப் கண்காணிக்கவும் தனிக்குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். இத்திட்டம் வெற்றி பெற்றால், மற்ற மாநிலங்களும் இதனை முன்னெடுத்து செல்லும் என ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நடைப்பெற்ற ஆய்வு கூட்டத்தில் பழங்குடியினர் மற்றும் கிராமப்புற மக்கள் வேலைக்காக இடம்பெயர்வது குறித்து முதல்வர் கவலை தெரிவித்ததோடு, இதனை சரிபார்க்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) -யின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக அம்மாநில அரசாங்கம் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல் தற்போது இந்த திட்டமும் விரைவில் வேகமாக அம்மாநிலத்தில் செயல்படுத்தபடும் என எதிர்பார்க்கபடுகிறது….

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.