பீஸ்ட் படத்தில் மலையாள நடிகரைத் தமிழுக்கு அழைத்து வந்து அவரை சரியாகப் பயன் படுத்தாமல் விட்டுவிட்டார் என்ற விமர்சனத்திற்கு ஆளானார் நெல்சன்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ஜெயிலர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குநர் நெல்சனுக்கும், ரஜினிக்கும் முக்கியமான படமாக இது இருக்கும், இருவருமே வெற்றிப்படம் தரவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த 22ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ஏற்கனவே வெளியான தகவலின்படி ஜெயிலர் படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாகப் படக்குழு வீடியோவுடன் டிவிட்டரில் அறிவித்துள்ளது.
தமிழில் வெளியான திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியுடன் சேர்ந்து வில்லத்தனம் செய்ததன் மூலம் மலையாள நடிகர் விநாயகன் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகினார். பின் மரியான் போன்ற சில தமிழ்ப் படங்களில் மட்டுமே சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். ஆனால் மலையாள திரையில் இவர் நடிப்புக்கும் கதைக்கும் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். குறிப்பாக மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து கம்மட்டிப்பாடம் என்கிற படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான கேரள அரசு விருதையும் பெற்றார்.
இதற்கு முன் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் ஷைன் டாம் சாக்கோ என்ற மலையாள நடிகரைத் தமிழுக்கு அழைத்து வந்து அவரை சரியாகப் பயன் படுத்தாமல் விட்டுவிட்டார் என்ற விமர்சனத்திற்கு ஆளானார். இந்நிலையில் தற்போது அவர் படத்தில் இணைந்துள்ள மலையாள நடிகரான விநாயகனை வைத்து என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.







