”ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்காவிட்டால் காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் ஏமாற்றம் அடைவார்கள், தொண்டர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் முன்வர வேண்டும்” ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்காவிட்டால் அந்த பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் வார்த்தைகள்தான் இவை.
இப்படி கட்சியின் அதிகாரம் மிக்க தலைவர்கள் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல்காந்தி மீண்டும் வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அவர் தனது முடிவை அறிவிக்காமல் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி எம்.பியின் இந்த தயக்கத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என பல்வேறு கோணங்களில் அரசியல் வட்டாரங்களில் யூகிக்கப்படும் தகவல்களைப் பார்ப்போம்.
பாஜகவிடமிருந்து காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரதான விமர்சனம் வாரிசு அரசியல். காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சியாக விளங்குவதாக பிரதமர் மோடி பல மேடைகளில் சாடியுள்ளார். கட்சியும், காங்கிரஸ் தலைவர் பதவியும் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டைவிட்டு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலை நடத்த சோனியாகாந்தி குடும்பம் தயங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் விமர்சித்திருந்தார். வாரிசு அரசியல் குறித்த பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்த ராகுல்காந்தி விரும்பலாம்.
12 மாநில தேர்தல்
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு முன்பு குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்களை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது கட்சியின் தலைவர் பதவியை ஏற்றால் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஒருவேளை எதிர்பாராதவிதமாக இருந்தால் தலைவர் என்கிற முறையில் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். இதனால் கட்சியை 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்வதில் தமது உற்சாகம் குறையும் என ராகுல்காந்தி நினைத்திருக்கலாம்
காங்கிரசின் அடையாளம்
பாஜகவில் தற்போது தேசிய தலைவராக ஜே.பி.நட்டா இருந்தாலும் அக்கட்சியின் பிரதான அடையாளமாக பிரதமர் மோடியே காணப்படுகிறார். அது போன்று கட்சி தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டாலும் காங்கிரசின் முகமாக தாம் அறியப்படுவதில் எந்தவித சிக்கலும் இருக்காது என ராகுல்காந்தி நினைத்திருக்கலாம்.
போராட்டக் களம்
கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தாமே நேரடியாக பல்வேறு போராட்டங்களில் களம் இறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ராகுல்காந்தி. சமீபத்தில்கூட மத்திய அரசுக்கு எதிராக அவர் டெல்லியில் நடத்திய கறுப்புச் சட்டடை ஆர்ப்பாட்டம் பெரும் பேசு பொருள் ஆனது. காங்கிரசின் தலைவர் பதவியை ஏற்பதைவிட போராட்டக்களங்களை வழிநடத்தவே அதிகம் விரும்புகிறேன் என ராகுல்காந்தி கூறியிருந்தார். அடுத்த மாதம் 7ந்தேதி முதல் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நாடுதழுவிய பாத யாத்திரையை மேற்கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பல்வேறு போராட்டங்களை களத்தில் முன்னின்று வழிநடத்த வேண்டியிருப்பதால் காங்கிரஸ் தலைவர் பதவியை எற்க ராகுல்காந்தி தயக்கம் காட்டலாம் என்றும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழுவாக ஜி23 தலைவர்கள் குழு கருதப்படுகிறது. கட்சியில் அதிருப்தி குரல்களை அவ்வப்போது இந்த ஜி23 தலைவர்கள் வெளியிடுவதுண்டு. அந்த குழுவில் இடம்பெற்றுள்ள குலாம் நபி ஆசாத், கபில் சிபல், உள்ளிட்டோர் கட்சியில் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும் என்று கபில் சிபல் வெளிப்படையாகவே வலியுறுத்தினார். அந்த குரல்களுக்கு செவிசாய்க்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் பதவியை மீண்டும் ஏற்பதில்லை என ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளாரா என்றும் டெல்லி அரசியல் வட்டாரத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கட்சியில் ஒருத்தர்- ஆட்சியில் ஒருத்தர்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியையே பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி முன்னிறுத்தும் என்றும் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்பட்சத்தில், ஆட்சிப்பொறுப்பு ஒருத்தரிடமும், கட்சிப் பொறுப்பு ஒருத்தரிடமும், இருந்தால் நல்லது என நினைக்கும் ராகுல்காந்தி, பிரதமராக தாம் ஆட்சியை சிறப்பாக வழிநடத்துவதற்கு வசதியாக கட்சிப்பொறுப்பை தற்போதே தகுதிவாய்ந்த ஒருவரிடம் வழங்க விரும்பலாம் எனக் கூறப்படுகிறது. நேரு நாட்டின் பிரதமராக இருந்த 17 ஆண்டுகளில் சுமார் 13 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியில் இளைஞர்களை அதிகம் முன்னிறுத்த விரும்பும் ராகுல்காந்தி, அவரது விருப்பத்திற்கேற்ற அதிரடி சீர்திருத்தங்கள் காங்கிரசில் இன்னும் நிகழவில்லை எனக் கருதிகூட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை ஏற்க தயங்கலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ராஜினாமா கடிதம்
கடந்த 2017ம் ஆண்டும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற ராகுல்காந்தி, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சி அடைந்த படுதோல்வியை அடுத்து இரண்டே ஆண்டுகளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகிய ராகுல்காந்தி, தனது ராஜினாமா கடிதத்தில், காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைவராக வர வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றால் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும் என்று ராகுல்காந்தி எண்ணியிருக்கலாம்.
உட்கட்சி ஜனநாயகம்
காங்கிரஸ் கட்சியில் வாக்கெடுப்பு அடிப்படையில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று நீண்டநாட்கள் ஆயிற்று. ”சொந்த கட்சியில் ஜனநாயகத்தை மீட்கும் சூழ்நிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் விமர்சித்தார். இந்நிலையில் பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு வலுவான தலைவர் தேர்தலை காங்கிரசில் நடத்த வேண்டும் என்று ராகுல்காந்தி நினைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் மற்ற தலைவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தயங்குவார்கள் என்பதால் ப்ரியங்கா காந்தி உள்பட தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதே ராகுல்காந்தியின் விருப்பம் என்று டெல்லி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
செயல் தலைவர் பதவி
தற்போது இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்தியையே தலைவராக தொடரச் செய்து, அவரது உடல்நிலையை கருதி மண்டலத்திற்கு ஒரு செயல் தலைவர் பதவியை உருவாக்கி கட்சியின் மூத்த தலைவர்களுக்கு அந்த செயல்தலைவர் பதவிகளை வழங்கும் திட்டமும் காங்கிரசில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க முன்வராததற்கான பின்னணியில் இந்த திட்டமும் இருக்கலாம் என தேசிய அரசியலில் யூகங்கள் உலாவருகின்றன.
நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பிந்தை காங்கிரஸ் கட்சியின் பயணத்தில் அக்கட்சியை 16 தலைவர்கள் வழிநடத்தியிருக்கிறார்கள். அந்த 16 தலைவர்களில் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என மூன்று தலைமுறைகளாக நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தில் 42 ஆண்டுகள் அமர்ந்துள்ளனர். தலைவர், இடைக்காலத் தலைவர் என மொத்தம் 22 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்தில் அமர்ந்துள்ளார் சோனியாகாந்தி. 137 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் மிக நீண்ட காலம் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்கிற பெருமை சோனியா காந்திக்கு உண்டு. இப்படி நேருக் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்புடைய காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த முறை நேரு குடும்பத்தின் வசமே காங்கிரஸ் தலைவர் பதவி நீடிக்குமா அல்லது நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரசின் தலைமை பீடத்தில் ஏறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.













