அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை அணிவிக்க பாஜகவினருக்கு அருகதை இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமத்துவ விழா, இஃப்தார் விருந்தின் நோன்பு துறக்கும் நிகழ்வு ஆகியன நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அம்பேத்கரின் கொள்கையை கொண்டு, சனாதன கொள்கையை இந்திய அளவில் மிக வலிமையாக எதிர்ப்பது விசிகதான் எனக் கூறினார்.
மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விடுதலை சிறுத்தைகளின் குரல் தொடர்ந்து ஒலித்து வருவதாக கூறிய திருமாவளவன், அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைக்கு நேரெதிரான சனாதன கொள்கையைக் கொண்ட பாஜகவினருக்கு, அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க அருகதை இல்லை எனவும் தெரிவித்தார்.
பாஜக சமத்துவத்திற்கான கட்சி அல்ல, பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு என செல்பவர்கள் தான் ஆர்எஸ்எஸ் கும்பல், அவர்கள் ஒரு போதும் சமத்துவத்தை விரும்ப மாட்டார்கள் என்ற அவர், சமூகநீதி சமத்துவத்தை தரும் அரசமைப்பு சட்டத்தை அழித்தொழிக்க துடிக்கிறார்கள் என்றார். மேலும், சனாதன கும்பல் இதுவரை சந்தித்த அம்பேத்கர் இயக்கங்கள் வேறு விசிக வேறு என்பதை போக போக தெரிந்து கொள்வார்கள் என்றும் விமர்சித்தார்.







