அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் மசோதாவை திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அறிமுக நிலையிலேயே இதற்கு அதிமுக, பாஜக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர், 1949-ஆம் ஆண்டு குஜராத் பல்கலைக்கழகச் சட்டம், 1991-ஆம் ஆண்டு தெலுங்கானா பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி, துணைவேந்தரை நியமிக்க தொடர்புடைய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது, 2000-ஆம் ஆண்டு கர்நாடக மாநில பல்கலைக்கழகங்கள் சட்டத்தின்படி மாநில அரசின் இசைவுடன் வேந்தரால்துணைவேந்தரானவர் நியமிக்கப்படுதல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேற்சொன்ன பிற மாநில பல்கலைக்கழக சட்டங்களுக்கு ஏற்ப, தமிழ்நாடு மாநில அரசானது, மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரமளிக்கப்படுதல் வேண்டும் என கருதப்படுகிறது என்றும் தெரிவித்தார். எனவே, அரசானது, அந்த நோக்கத்திற்காக, கீழ் குறிப்பிட்டுள்ள பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்துவதென முடிவு செய்துள்ளது என்ற அமைச்சர் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் என 12 பல்கலைக் கழகங்களில் சட்டங்களை திருத்தப்படுகிறது என்று பேசினார்.
இதுபோலவே 2022 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டமுன்வடிவையும் அறிமுகம் செய்தார். இதற்கு, கொமதேக, மமக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘நீட் விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைத்தவர்கள்’
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட போட்டித்தேர்வுகளுக்கான தாமரை இலவச போட்டித் தேர்வு மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசு துணை வேந்தர் பதவியை வியாபாரமாக ஆக்கியிருப்பதாக கூறினார். அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கு மட்டும் துணைவேந்தர் பதவியை திமுகவினர் அளித்துள்ளனர் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
தேர்வுக் குழுவின் பரிசீலனையில் மாநில அரசின் தலையீட்டுடன் துணைவேந்தர் நியமிக்கப்படுவதாகவும், அதில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







