பில்கிஸ் பானு கூட்டுபாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதை திரும்பபெற வேண்டுமென ஓய்வு பெற்ற 134 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
2002ம் ஆண்டு கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானு என்னும் 5 மாத கர்ப்பிணி பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மேலும் அவரது 3 வயது மகள் உள்பட, அவரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொல்லப்பட்டன்ர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு ஆயுள் தண்டை வழங்கி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகளை நன்னடத்தை அடிப்படையில் குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இவர்களது விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் சனிக்கிழமை பொறுப்பேற்று கொண்டார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பில்கிஸ் பானு வழக்கில் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து ஓய்வு பெற்ற 134 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதிதாக பதிவியேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்காகும். இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், 3 வயது பச்சிளம் குழந்தை உள்பட, பில்கிஸ் பானுவின் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கு தொடர்புடைய ஆதாரங்களை அழிக்கவும் முயற்சி செய்துள்ளனர்.
இந்த குற்றாவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளது நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்வி குறியாக்கியுள்ளது. இந்த வழக்கில் குஜராத் அரசு செய்துள்ள தவரை உச்சநீதிமன்றத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும். எனவே மாநில அரசால் விடுவிக்கப்பட்டவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோருவதாக கடித்ததில் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப்ஜங், முன்னாள் மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவு செயலாளர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங் உள்ளிட்டோர் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.







