ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்கியது.
குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கையும் ஆப்கானிஸ்தானும் முதல் ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் சுருண்டது.
பதும் நிசன்கா 3 ரன்களிலும், விக்கெட் கீப்பர் குசால் மென்டிஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க, அசலங்கா டக் அவுட்டாகி நடையைக் கட்டினார்.
குணதிலகா, பி.ராஜபக்சே நிதானமான விளையாடினர். எனினும், நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் குணதிலகா 17 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹசரங்கா 2 ரன்கலும், கேப்டன் ஷனகா டக் அவுட்டும் ஆகி அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தனர்.
சி. கருணாரத்னே நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து ராஜபக்சே 38 ரன்கள் எடுத்திருந்தார்.
இவ்வாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 105 ரன்களில் ஆல்-அவுட்டானது.
106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கன் விளையாடி வருகிறது.
ஆப்கன் தரப்பில் அதிகபட்சமாக ஃபரூக்கி 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.
முன்னதாக, 1984ம் ஆண்டு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தப் போட்டி சில முறை மட்டும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா காரணமாக 2020 நடத்தப்படவில்லை. ஆரம்பத்தில் ஆசி கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. தற்போது 20 ஓவர் வடிவில் விளையாடப்பட்டு வருகிறது.








