நிதிஷ்குமார் பாதுகாப்பில் குறைபாடா? நடைபயிற்சியின் போது இரு சக்கர வாகனம் மோத வந்ததால் பரபரப்பு!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடைபயிற்சி சென்ற போது அவரது பாதுகாப்பு வளையத்தை தாண்டி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பீகார் முதல்வரான நிதிஷ் குமார்…

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நடைபயிற்சி சென்ற போது அவரது பாதுகாப்பு வளையத்தை தாண்டி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இடிக்கும் அளவுக்கு நெருங்கி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

பீகார் முதல்வரான நிதிஷ் குமார் ஒரு மாநில முதல்வர் என்பதை தாண்டி தேசிய அரசியலில் கவனிக்கத்தக்க அரசியல் தலைவராக இருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களை கருத்துவேறுபாடுகளை தாண்டி அவர்களை சந்தித்து ஒருங்கிணைக்க முயற்சித்து வருகிறார். எதிர்கட்சிகள் ஒன்றிணைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கும் போதும் நிதிஷ் குமாரின் முயற்சி தேசிய அரசியலில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

நிதிஷ் குமாரின் ஏற்பாட்டில் வரும் 23-ஆம் தேதி எதிர்கட்சிகள் கூட்டம் பாட்னாவில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதை உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த சூழலில் நிதிஷ் குமார் இன்று காலையில் நடைபயிற்சி சென்ற போது அவரது பாதுகாப்பு அதிகாரிகளை தாண்டி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நிதிஷ் குமாரை இடிக்கும் அளவுக்கு நெருங்கி வேகமாக சென்றுள்ளனர். அப்போது சுதாரித்துக்கொண்ட நிதிஷ் குமார் நடைபாதையில் குதித்திருக்கிறார். இதனால் இருசக்கர வாகனம் நிதிஷ் குமார் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இதனை அடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இருவரையும் பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பாற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட பல முக்கிய அரசியல்வாதிகள் வசிக்கும் பகுதியான சர்குலர் ரோடு அருகே இச்சம்பவம் நடந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் திட்டமிட்டு நிதிஷ் குமாரை இடிக்குமாறு வந்தனரா, இதில் வேறு ஏதும் உள்நோக்கம் இருக்கிறதா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.