நாங்குநேரியில் ஊருக்குள் புகுந்த கரடி வனத்துறையினா் கூண்டுக்குள் சிக்காததால், பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
நெல்லை நாங்குநேரியில் ஜூன் 11ம் தேதி வனப்பகுதியிலிருந்து தப்பி வந்த கரடி ஊருக்குள் புகுந்தது. கரடியை கண்ட விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து திருநெல்வேலி வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து வனத்துறையினர் கூண்டு வைத்து கரடியை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அங்குள்ள வாழைத்தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கூண்டு வைக்கப்பட்டு, 4 நாட்களாகியும் கரடி இன்னும் கூண்டுக்குள் சிக்காமல் உலா வருகிறது.இருப்பினும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும் கரடி உலாவரும் பகுதியில் பள்ளிகள், கோயில், ரயில் நிலையம், மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் ஏதும் அசம்பாவிதம் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். 4 நாட்களாகியும் கரடி பிடிபடாததால் விவசாயிகள் தோட்டத்திற்கும், பள்ளி மாணவர்கள் பள்ளி செல்வதற்கும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எனவே ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் கரடியை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரூபி.காமராஜ்







