சென்னையில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக கூறி, நடிகர் ஜெமினி கணேசனின் பேரனும், பிக்பாஸ் பிரபலமுமான அபிநய்யின் மனைவி அபர்ணா மோசடி செய்துவிட்டதாக, அவர் மீது போலீசார் 6 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கு பெற்று பிரபலமானவர் அபிநய் வட்டி. இவர் மறைந்த பழம்பெரும் நடிகர்களான ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் மகள் வழி பேரன். இவரது மனைவி அபர்ணா துணிக்கடை நடத்தி வருகிறார், அந்த வகையில் அபர்ணா வைத்திருக்கும் ஜவுளிகடைக்கு மஞ்சு என்ற பெண் ஆடைகளை வடிவமைத்து சப்ளை செய்து வந்துள்ளார். இந்த சமயத்தில், சென்ற ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மஞ்சுவின் மகளுக்கு அவர் ஆசைப்பட்ட மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என அபர்ணாவிடம் மஞ்சு வருந்தியதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு அபர்ணா, மஞ்சுவின் மகள் விருப்பப்பட்ட கல்லூரியில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் மருத்துவ சீட் வாங்கி விடலாம் என்றும் கூறினாராம். அதற்கு முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என அபர்ணா கூறியதோடு, மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தாராம்.
இதனை நம்பிய மஞ்சு கடந்த ஜனவரி மாதம் அபர்ணா சொன்னது போலவே, அவரது நண்பர் அஜய் வங்கிக்கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அபர்ணா, மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது போலவே ஒரு சான்றிதழை, மஞ்சுவின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், கல்லூரிக்கு சென்ற விசாரிக்கும் போது தான், அது ஒரு போலி சான்றிதழ் என தெரியவந்ததாகவும், இதனையடுத்து, அபர்ணாவிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டதற்கு, தனது நண்பரிடம் சென்று வாங்கிக்கொள்ளுமாறு கூறி அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் ஒருக்கட்டத்தில் அபர்ணா அவரது ஜவுளிகடையை மூடி தலைமறைவானதோடு, அவர் குறித்த எந்த தகவலும் மஞ்சுவிற்கு கிடைக்கவில்லையாம். இதனால் அதிர்ந்துபோன மஞ்சு, சென்னை மாம்பலம் போலீசில் அர்பணா மீது புகார் தந்துள்ளார். அதன்படி போலீசார், அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் மீது மோசடி, போலி ஆவணம் உருவாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அவரை தேடி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா