கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிறம் கொண்ட பெரிய அளவிலான பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் தமிழகத் தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி 13ம் தேதி முதல் கீழடி, அகரம், கொந்தகை பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. கீழடியில் மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அதிலிருந்து இதுவரை உழவு கருவி, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாயக்கட்டை, கருப்பு வண்ண பானை ஓடுகள், கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகள், சிறிய கலயம் உள்ளிட்ட பதினான்காயிரம் பொருட்கள் கண்டறியப்பட்டன. தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றும் வகையில் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முழு வீச்சில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
கீழடியில் இதுவரை மண்பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழில் பயன்படும் தக்களி , கற்கோடாரி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மை மற்றும் கண்ணாடி பாசிகள், வெள்ளிக்காசு, செப்பு மோதிரம், உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவை கண்டறியப்பட்டிருந்த நிலையில், இன்று கீழடியில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளும் போது பழங்கால மக்கள் பயன்படுத்திய பெரிய அளவிலான பானை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பானை சிவப்பு நிறத்தில், அளவில் பெரியதாகவும், பானையின் கழுத்து பகுதியை சுற்றி நுணுக்கமான வேலைப்பாடுகளும் காணப்படுகிறது. இந்தப்பானை இதுவரை கிடைத்த பானைகளிலேயே பெரிய அளவிலானது எனக்கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிவப்பு நிற பெரும்பானையை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தரைவிட்டுக்கிளம்பும் தமிழன் நாகரிகம் எனக்குறிப்பிட்டுள்ளார்.







