கொரோனா காலத்தை பயன்படுத்தி பள்ளி மாணவர்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களை திறப்பது தொடர்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 14 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் பள்ளிகளை திறக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புக்களை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.







