கீழடி 7ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சுடு மண்ணாலான தொட்டி கண்டறியபட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5 மற்றும் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல் முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி விரிவான முறையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. 7ம் கட்ட அகழாய்வில் இதுவரை முதுமக்கள் தாழியுடன் கூடிய மனித எலும்பு கூடுகள், மண் பானைகள், வட்டில் மூடிகள், சங்கு வளையல்கள், பருகு நீர் குவளை, அகண்ட வாய் கின்னம், பகடைகாய், உழவுவிற்கு பயன்படுத்தும் கல்லால் ஆன கருவி, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் குவளை, கருப்பு சிகப்பு நிறம் கொண்ட மண் ஓடு, வட்ட வடிவிலான சுடுமண்ணால் செய்யப்பட்ட வளையம், தங்க ஆபரண கம்பி, தூது பவள மணிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் கீழடியில் சுடுமண்ணால் ஆன தொட்டி கண்டறியப்பட்டுள்ளது. 2 அடி உயரமும் சுமார் 4 அடி சுற்றளவும் கொண்ட இந்த தொட்டியில் இரு இடங்களில் வட்ட வடிவிலான சிற்பம் போன்ற அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் பகுதியில் தொடர்ச்சியாக சுடுமண் சுவர் உள்ளதால் இது பல அடுக்குகளை கொண்ட உரை கிணறாக இருக்கலாம் எனவும், அதன் வடிவமைப்பை முழுமையாக அறிந்த பின்னரே அது உரை கிணறா அல்லது தண்ணீர் தொட்டியா என்பது தெரியவரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே பொதுமக்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண்ணிலான தண்ணீர் தொட்டியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியியல்த்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பகிர்ந்துள்ளார்.







