ஆந்திராவுக்கு வெளியே மும்பையில் உள்ள நவி மும்பையில் ஏழாவது ஏழுமலையான் கோவிலை கட்ட இன்று காலை பூமி பூஜை நடத்தப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில்களை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஸ்ரீ வாணி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி தேவஸ்தான நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசனம் அனுமதி வழங்கப்படுகிறது. எனவே பக்தர்கள் போட்டி போட்டு நன்கொடை வழங்கி டிக்கெட் வாங்கி ஏழுமலையானை வழிபடுகின்றனர். இதற்கு முன்தினமும் 2000 டிக்கெட்டுகள் இது போல் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது கோடை விடுமுறை, பக்தர்கள் வருகை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, நாள் ஒன்றுக்கு 500 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஹைதராபாத், புவனேஸ்வர், கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் ஏழுமலையான் கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டி உள்ளது. அவற்றில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள நவி மும்பையில் ஏழாவது ஏழுமலையான் கோயிலை கட்ட இன்று காலை பூமி பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலர் குல தலைவர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி மற்றும் மும்பை சேர்ந்த பிரபலங்கள், ரெய்மாண்ட்ஸ் அதிபர் கௌதம் சிங்கானி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நவி மும்பையில் கோவில் கட்டுவதற்காக சுமார் 500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நன்கொடையாக வழங்கியது. அந்த இடத்தில் 60 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவிலை நன்கொடையாக கட்டி கொடுக்க ரெய்மாண்ட்ஸ் நிறுவன அதிபர் கௌதம் சிங்கானி முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









