சமூக அக்கறை கொண்ட இளைஞர்களின் கனவு நாயகன் மாவீரர் பகத் சிங். ஆங்கிலேய அடிமை விலங்கால் பூட்டப்பட்ட இந்தியாவில் சுதந்திர தாகத்திற்காக தன் உயிரினை தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கி முன்னுதாரணமாக திகழ்ந்த புரட்சியாளர்.
ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இந்தியா சிக்கித் தவித்த காலத்தில், சுதந்திர வேட்கையுடன் தீவிரமாக செயல்பட்டார் பகத் சிங். ஐரோப்பிய புரட்சி இயக்கங்களுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, பொதுவுடைமை கொள்கையால் ஈர்க்கப்பட்ட பகத் சிங், இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.
சுதந்திர வேட்கை கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் பகத் சிங், சிறுவயதிலேயே சுதந்திர போராட்ட வீரராக மாறினார். 1919 ஆம் ஆண்டில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் பகத்சிங் மனத்தில் பேரிடியாக விழுந்தது. இதனால், இளைய புரட்சி இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேயர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற அகிம்சைக்கு மாற்றான கொள்கைகளை பிரச்சாரம் செய்து இளைஞர்களை ஒன்றிணைக்கும் பணியில் தீவிரம் காட்டினார். பகத்சிங்கின் பிரச்சாரத்திற்கு அஞ்சிய ஆங்கிலேய அரசு அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொண்டது. ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு அஞ்சாமல், 1926 ஆம் ஆண்டு, நவஜவான் பாரத சபா என்கிற இளைஞர் சங்கத்தை நிறுவி சுதந்திர வேட்கையை சுடர்விடச் செய்தார்.
இதனால், 1927 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், ஐந்து வார கொடுங்கோல் சிறைவாசத்திற்கு பிறகு மீண்ட பகத்சிங், தனது சுதந்திர கனவை முன்பை விடக் கூர்தீட்டினார். இந்த சூழலில்தான் இந்தியாவின் அரசியல் நிலைமையை அறிய ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சைமன் கமிஷன் 1928ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதனை எதிர்த்து லாலா லஜபதிராய் அகிம்சை வழியில் அமைதிப் பேரணியை நடத்தினார். இதில் ஏற்பட்ட கலவரத்தில், காவல் அதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் தடியடி நிகழ்த்தியதில் லாலா லஜபதிராய் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம், பகத்சிங்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட தனது சக போராளிகள் ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருடன் இணைந்து திட்டம் தீட்டினார். இருப்பினும், அந்த திட்டத்தில், துணை காவல் அதிகாரியான சாண்டர்ஸ் உயிரிழந்தார். பின்னர் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் நாடாளுமன்றத்தின் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியதுடன் துண்டுப் பிரசுரங்களை வீசி, இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்டு ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தனர்.
தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர வேட்கைக்காக போராடிய பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரை 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஆங்கிலேய அரசு தூக்குக் கயிற்றில் ஏற்றியது. தூக்கு மேடைக்கு அஞ்சாமல், தன் தாயகக் கனவுகளுடன் சாவினை ஏற்ற பகத் சிங் சரித்திரத்தின் மற்றொரு அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார். அடிமை விலங்கை உடைக்க பாடுபடும் கோடான கோடி இளைஞர்களின் கனவு நாயகனாகவே பகத்சிங் வரலாற்றில் இன்றும் திகழ்கிறார்.







