“மாயாவதி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவோம்” என்று பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பிரதமர் வேட்பாளராக அறிவி்க்கப்பட்டால் கூட்டணி வைக்க தயார் என்று அக்கட்சியின் தேசியச் செய்தித்தொடர்பாளர் தரம்வீர் செளதரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்ற இறுதி முடிவை மாயாவதி தான் எடுப்பார். எதிர்க்கட்சிகளிடம் மாயாவதி அளவுக்கு மிகப் பெரிய தலைவர்கள் யாரும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த கிடையாது. எதிர்க்கட்சிகளை பகுஜன் சமாஜை அணுகினால் அவர்களுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயங்க மாட்டோம்.
நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட தலைவர் மாயாவதி. அவரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அகிலேஷ் யாதவை விட மாயாவதி நன்கு அறியப்பட்ட தலைவர். உத்தரப் பிரதேசத்தில் 4 முறை முதல்வராக பதவி வகித்தவர்.
அகிலேஷ் யாதவ் ஒரே ஒரு முறை தான் இந்தப் பதவியை வகித்திருக்கிறார். பரந்துபட்ட மனசு கொண்ட தலைவர் என்பதுடன், பிறர் தவறுகளை மன்னிக்கத் தெரிந்தவர். மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் ஏற்றுக் கொண்டால் அவரை மாலை அணிவி்த்து வரவேற்க தயாராக இருக்கிறோம் என்று தரம்வீர் செளதரி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் பகுஜன் சமாஜ் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.








