இந்தியா கட்டுரைகள்

ஆங்கிலேயர் ஆட்சியை மிரளவைத்த மாவீரன்


எல்.ரேணுகா தேவி

கட்டுரையாளர்

நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். மதமாச்சர்யங்கள், மொழி, இன, பேதங்களை தாண்டி நாடு முழுவதும் எழுந்த போராட்டங்கள் ஆங்கிலேய அரசை நிலை குலைய வைத்தது. தெற்கே வீரபாண்டிய கட்டபொம்மன் முதல், வடக்கே பகத்சிங் என தங்கள் துயரை துச்சமென மதித்து நாட்டுக்காக தன்னுயிரை தியாகம் செய்தனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமாக ஜெனரல் டயரை, லண்டனுக்கு சென்று சுட்டு கொன்றார் உத்தம் சிங் என்கிற இளைஞர். பின்னர் உத்தம் சிங்கும் தூக்கிலிடப்பட்டார். விடுதலை போராட்ட வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்த கிங்ஸ்ஃபோர்ட் என்ற நீதிபதியை கொல்ல முயன்ற, 18 வயது கூட நிரம்பாத குதிராம் போசும் தூக்கிலிடப்பட்டார். இப்படி தேச விடுதலைக்காக தங்கள் உயிரை தியாகம் செய்தவர்கள் ஏராளம். ஆனால் பகத்சிங், ராஜகுரு, சுகுதேவ் மற்றும் அவர்தம் தோழர்களின் தியாகம், தியாகிகளின் வரிசையில் மட்டும் பேசப்படுவதோடு நில்லாமல், அதையும் தாண்டி நிலைத்து நிற்கிறது.

பகத்சிங் மற்றும் அவர் தோழர்களின் அறிவாற்றலும், கொள்கை உறுதியும், தனித்துவமான தத்துவ பார்வையுமே இதற்கு காரணமாகும். 1907ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பிறந்த பகத்சிங், நேரடியாக களத்தில் நின்று ஆயுதம் ஏந்தி போராடிய சம்பவங்கள் இரண்டு. ஒன்று லாலா லஜபதி ராயின் மரணத்திற்கு காரணமான சாண்டர்சன் கொலை. மற்றொன்று நாடாளுமன்றத்தில் காலியான இருக்கைகள் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம்.

சாண்டர்சன் கொலை தொடர்பாக பகத்சிங் சார்ந்திருந்த, இந்துஸ்தான் சோசியலிஸ்ட் குடியரசு சங்கத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டியில், “ஒரு மனிதனை கொல்வதற்கு நாங்கள் வருத்தமடைகிறோம். ஆனால் இந்த மனிதன் ஒரு கொடுங்கோன்மை மற்றும் நியாயமற்ற ஆட்சியின் அங்கமாக இருந்தான். எனவே இந்த மனிதனை கொல்வது அவசியமாக இருந்தது…. நாங்கள் மனித உயிரை மிகவும் நேசிக்கிறோம். மனிதன் அமைதியையும் முழு சுதந்திரத்தையும் பெற வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம்.” என்று குறிப்பிட்டு இருந்தது.

ஆனால் அடுத்தடுத்த அவர்களின் செயல்பாடு கொள்கை ரீதியான முழக்கங்களை முன்வைத்து முன்னேற துவங்கியது. தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின், உரிமைகளை ஒடுக்கும் “தொழில் தாவா சட்ட முன்வடிவு”  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்க்கும் வகையிலேயே அன்று நாடாளுமன்றத்தில் பகத்சிங்கும், பட்கேஸ்வர் தத்தும் குண்டு வீசினர்.

குண்டு தயாரிக்கும் போதே உயிர் சேதம் ஏற்படுத்தாத வகையில் தயாரித்தனர். காலி இருக்கைகளை நோக்கியே அந்த குண்டும் வீசப்பட்டது. குண்டை வீசிவிட்டு தப்பி ஓட கூடாது, கைதாகி மக்களிடம் கருத்துக்களை பரப்பும் மேடையாக நீதிமன்ற விசாரணையை மாற்ற வேண்டும், என்று முன்பே தங்கள் கூட்டத்தில் முடிவெடுத்திருந்தனர். இதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.

நாடாளுமன்றத்தில் குண்டை வீசிவிட்டு, “கேளாத காதுகள் கேட்கட்டும்” என்ற பிரசுரத்தை வீசி எறிந்து “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்டனர். “கேளாத காதுகள் கேட்கட்டும்” என்று அவர்கள் வீசிய துண்டு பிரசுரம் முழுமையாக பத்திரிகைகளில் வெளியானது. நீதிமன்றத்தில் அவர்களின் வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மக்கள் மத்தியில் அவர்களின் வாதங்கள் கவனத்தை ஏற்படுத்தியது.

அதிர்ந்து போனார்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். நீதிமன்றத்தில் புரட்சி என்று நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள், என்று நீதிபதி கேட்டதற்கு ” புரட்சி வெறும் யுத்தம் அல்ல. தனிநபர் பழிதீர்த்தலுக்கு அதில் இடமில்லை. குண்டுகள் அல்லது துப்பாக்கிகளுக்கு துதி பாடுவதும் புரட்சி அல்ல. அநீதியின் மீது அமைந்துள்ள இந்த சமூக அமைப்பு மாற வேண்டும் என்பதே புரட்சிக்கு நாங்கள் கூறும் பொருளாகும்” என குறிப்பிட்டனர்.

இந்த தெளிந்த கண்ணோட்டம் அவர்களின் வாசிப்பினூடே வளர்ந்ததாகும். சிறையில் பகத்சிங் இருந்த இரண்டு ஆண்டுகளில் 56 நூல்களை வாசித்து, சுமார் 404 பக்கத்திற்கு குறிப்புகள் எடுத்துள்ளார். தங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளிட்டவற்றை முன்வைத்து, பலமுறை சிறையில் பகத்சிங் மேற்கொண்ட உண்ணாவிரதங்களை கணக்கிட்டால் ஐந்து மாதங்கள் வரை வருகிறது. இது மகாத்மா காந்தி வாழ்நாள் முழுவதும் இருந்த உண்ணாவிரத காலத்தை விட அதிகம், என்று குறிப்பிடுகிறார் பேராசிரியர் சமன்லால்.

பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சுமார் 45 நாட்களுக்கு முன்பு, இளம் தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில் “நான் ஒரு பயங்கரவாதியல்ல. நான் ஒரு புரட்சியாளன். நீண்ட திட்டத்தை தீர்மானகரமான சிந்தனைகளைப் பெற்றிருக்கும் ஒரு புரட்சியாளன். எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களை தவிர. நான் ஒருபோதும் பயங்கரவாதியாக இருந்ததில்லை” என்று பிரகடனம் செய்தார்.

“இந்த போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்களோடு முடியபோவதுமில்லை. மனிதனை, மனிதன் சுரண்டும் சமூக அமைப்பு மாறும் வரை இப்போராட்டம் தொடரும். பாலுக்கு அழாத குழந்தையும், கல்விக்கு ஏங்காத மாணவனும், வேலைக்கு அலையாத  இளைஞனும் உள்ள நாடே எனது கனவு இந்தியா” என்றார் பகத்சிங்.

நாடு விடுதலை பெற்ற 75-வது பவள விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் 23 வயதே நிரம்பிய பகத்சிங் கண்ட கனவை, அனைவரிடமும் கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கும் உள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கொங்கு நாடு என்று பயன்படுத்தப்பட்டது ஏன்? – எல்.முருகன் விளக்கம்

Jeba Arul Robinson

“கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த ரங்கசாமி அரசு தவறிவிட்டது”

Gayathri Venkatesan

வருகிறது புதிய கொரோனா தடுப்பூசி

Saravana Kumar