பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு, இடைத்தேர்தலில் கவுரவமான வாக்கு, விலகிச் சென்றவர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் தங்கள் பக்கம் சேர்ப்பு என தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கிறது அதிமுக. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் இபிஎஸ் வகுக்கும் அடுத்த வியூகம் என்ன? என்ன செய்யப்போகிறார் ஓபிஎஸ் என்பது குறித்து பார்க்கலாம்….
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளரை களமிறக்கியது. உச்சநீதிமன்றத்தை நாடி, இரட்டை இலை சின்னத்தை பெற்றது. அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடங்கி, கூட்டணிக் கட்சியினர் வரை பிரச்சாரம் செய்தது. இடைத்தேர்தலில் தோல்வி என்றாலும் கணிசமான வாக்கைப் பெற்று, டெபாசிட்டை தக்க வைத்தது என எல்லாமே இபிஎஸ்க்கு சாதகமாகவே இருக்கிறது. இதை தமிழ்நாடு முழுக்க கொண்டு செல்ல அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கொங்கு மண்டலத்தில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவத்தும் குறிப்பாக, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் தனக்கு செல்வாக்குள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் தொடர் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். மதுரை மீனாட்சியம்மனை வழிபட்டு, தொடங்கப்பட்டுள்ள பயணம், அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் தொடர உள்ளது. இந்த பயணத்தில், அந்த பகுதியில் உள்ள அமமுக, ஓபிஎஸ் ஆதரவாளர்களை இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி உமாதேவன் சேர்த்தது இதன் தொடக்கம் என்கிறார்கள்.
ஒபிஎஸ்-க்கு அதிர்ச்சி?
திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ள ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், டெல்டா மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுக்கவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக பின்னடைவைச் சந்தித்து வரும் ஓபிஎஸ் அணியினர், இதையெல்லாம் முறியடிக்கவும் தொண்டர்களைத் தக்க வைக்கவும் மாவட்டம் தோறும் தொண்டர் சந்திப்பு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் அவரது விரிவான பயணத் திட்டம் அறிவிக்கப்படும் என்றும், இந்த பயணத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள் : பண்ணை ஃப்ளேவர் ஐஸ்கிரீம் – இது புதுசா இருக்குண்ணே!!
’இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தங்கள் ஆதரவு தளத்தை தக்க வைக்கவும். அனைத்து மாவட்டங்களிலும் செல்வாக்கை விரிவாக்கவும் வியூகம் வகுத்து வருகின்றனர். இதில், இபிஎஸ் வேகம் காட்டி, அடித்து ஆடி வருகிறார். ஓபிஎஸ் வழக்கம் போல் நிதானமாக நின்று கொண்டிருக்கிறார்’ என்கிறார்கள்.
குறிப்பாக, கூட்டணிக் கட்சியினராக இருந்தாலும் விரும்பி வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று மாவட்ட வாரியாகவும் பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேருவதையும் பார்க்க முடிகிறது. இதனால் உரசல் வந்து, விரிசல் ஏற்பட்டாலும் கவலையில்லை. நம்முடைய தேவை அவர்களுக்குத்தான் அவசியம் என்று அதிமுக நினைக்கிறது என்கிறார்கள்.
எதிர்ப்பு தொடரும்
மதுரை விமான நிலையத்தில் ராஜேஸ்வரன் என்பவர் இபிஎஸ்ஸை விமர்சனம் செய்தது, இதையடுத்து நடைபெற்ற நிகழ்வுகள், வழக்குப்பதிவு ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதைசரியாக கையாண்டுள்ளதாக கட்சியினர் சொல்கின்றனர். இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இபிஎஸ் தென் மாவட்டங்களுக்கு செல்லும் போது, தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பைக்காட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களும் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு தக்க பதிலடியைக் கொடுக்க இபிஎஸ் ஆதரவாளர்களும் தயாராகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, ’இப்போதும் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வங்கியுள்ள கட்சி அதிமுகதான். அதன் ஒற்றைத் தலைமை இபிஎஸ்தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்’ என்று விரும்புகிறார்கள் ஆதரவாளர்கள். விரைவில் பொதுச் செயலாளராக தேர்வு. அதற்கு முதல் கட்டமாக, கட்சி உறுப்பினர் அட்டையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதற்கு பதிலாக, இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
அடுத்து மாவட்ட பொறுப்புகளுக்கு துடிப்பானவர்களை நியமிப்பது என கட்சிக்குள் வியூகம். அதைத் தொடர்ந்து, வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணிக்கு தலைமை வகிப்பது மட்டுமின்றி, பெரும்பான்மை இடங்களில் போட்டியிடுவதற்கான அதிமுகவின் காய் நகர்த்தல்கள் என கூட்டணி வியூகமும் தொடங்கி விட்டது என்கிறார்கள். அதிமுகவின் வியூகங்கள் வெல்லுமா? பொறுத்திருந்த பார்க்கலாம்….
இது குறித்து சொல் தெரிந்து சொல் பகுதியில் வெளியான காணொளியைக் காண :









