சத்ரபதி சிவாஜி அடிமை மனப்பான்மையை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு விழா ஜூன் 1 மற்றும் 2-ம் தேதிகளில், ராய்காட்டில் கோட்டையில் கொண்டாடப்படும் என்றும், மகாராஷ்டிர அரசு சார்பில் ஆக்ராவில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அண்மையில் தெரிவித்தார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியதாவது, “சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் முடிசூட்டு விழா அந்தக் காலகட்டத்தில் சிறப்பு வாய்ந்த அத்தியாயம். தேச நலன் மற்றும் பொது நலம் ஆகியவை அவரது ஆட்சியின் அடிப்படை கொள்கைகளாக இருந்தன. இந்த விழா விழா உத்வேகம் மற்றும் ஆற்றல் அளிப்பதாகவும் உள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டு கால அடிமைத்தனம், மக்களிடம் இருந்த நம்பிக்கையை பறித்து விட்டது. அப்படிப்பட்ட நேரத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் கடினமான பணியை சத்ரபதி சிவாஜி செய்தார். அவர் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்துகிறார். அவர் வீரம் மற்றும் தைரியம் நமக்கு கலங்கரை விளக்கமாக உள்ளது. அவர் சுயராஜ்யத்தின் பாதையை நமக்கு காட்டியவர். அடிமை மனப்பான்மையை முடிவுக்குக் கொண்டுவந்தவர். சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்லாமல் அவர் சிறந்த நிர்வாகியும் ஆவார்” என புகழாரம் சூட்டினார்.







