ஐ.பி.எல் தொடரில் இணையும் புதிய இரண்டு அணிகள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். தொடரில் கூடுதலாக 2 அணிகள் இணைகின்றன.
இதற்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள், இதில் விண்ணப்பங்களை பெற்றுள்ளன நிலையில், அணியின் அடிப்படை விலையாக 2 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
அதானி குழுமம், ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், ஜிண்டால் ஸ்டீல், இங்கிலாந்து கால்பந்து கிளப்பான மான்செடர் யுனைடெட், கோடாக் குரூப், அரோபின்டோ மருந்து நிறுவனம் ஆகியவை புதிய அணியை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்தி நடிகர், நடிகைகளும் இந்த அணிகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அணிகள் அமைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிய அணிகள் பற்றிய விவரம் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை வருமானாம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல், ஐபிஎல் அடைந்துள்ள பிரபலம் மற்றும் தொழில் முன்மொழிவு காரணமாக சில தீவிரமான ஏலத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.








