பிபிசி அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்து ஜெய்சங்கரிடம் இங்கிலாந்து அமைச்சர் முறையிட்டார்.
வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த மாதம் 3 நாட்களாக இச்சோதனை நடத்தப்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அதற்கு மத்திய அரசு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து இந்த வருமான வரி சோதனை நடைபெற்றது.
இதையும் படிக்க: 3 மாநில தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை… ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
இந்நிலையில், ஜி20 தொடர்பான நிகழ்ச்சிக்காக ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் டெல்லி வந்துள்ளனர். அதேபோல, இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லியும் வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, பி.பி.சி. அலுவலக சோதனை குறித்து முறையிட்டார்.
அதற்கு ஜெய்சங்கர், ”இந்தியாவில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் உள்நாட்டு சட்டங்களுக்கும், ஒழுங்குமுறைகளுக்கும் முழுமையாக கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” என்று உறுதிபட கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-ம.பவித்ரா








