கோயம்பேடு மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்து திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வளாகம் கோயம்பேடு மொத்த விற்பனை பூ
மார்க்கெட், காய்கறி அங்காடி வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். தமிழர் திருநாளை முன்னிட்டு கோயம்பேடு மொத்த வணிக வளாக தூய்மை பணியாளர்களுக்கு கரும்பு மற்றும் பொங்கல் தொகுப்பை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, கூட்டம் அதிகம் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வாகனங்கள் எளிதில் உள்ளே வருவதற்கும், செல்வதற்கும் ஏற்பாடுகள் செய்வதற்கு குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். தற்போது மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை வெளியிட்டு, 15 நாட்களுக்குள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு மார்க்கெட்டில் பிரச்சனைகள் வராமல் இருக்க தனி காவல் நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
இது குறித்து முதலமைச்சரிடம் தெரிவித்து, அதன் பிறகு காவல் நிலையம் பயன்பாட்டிற்கு வரும். பொங்கல் சிறப்பு சந்தை கோயம்பேடு ஏரோட்டில் அமைக்கப்பட உள்ளது. மார்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த, விரைவில் வியாபாரி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
திருமழிசை மொத்த சந்தை பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கோயம்பேடில் உள்ள
கடைகளை அங்கு இடமாற்றம் செய்வது குறித்து, வியாபாரிகளுடன் கலந்தாலோசித்து
முதல்வரின் கருத்துகளை கேட்டு நிதானமாக முடிவெடுக்கப்படும். கோயம்பேடு மார்கெட் மேம்படுத்த ஏற்கனவே ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்து திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை பெறப்பட்டு மேற்கொண்டு மேம்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். பண்டிகை கால சிறப்பு சந்தையின் போது இடைத்தரகர்கள் இடையூறு செய்வதை கட்டுப்படுத்துவோம் என்று அமைச்சர் கூறினார்.







