தொடரும் அட்டூழியம்: மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு

பந்தலூர் பகுதியில் 2 பேரை கொன்ற pm 2 எனப்படும் தந்தம் இல்லாத மக்னா காட்டு யானை கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருவதால், pm 2…

பந்தலூர் பகுதியில் 2 பேரை கொன்ற pm 2 எனப்படும் தந்தம் இல்லாத மக்னா காட்டு யானை கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி வீடுகளை சேதப்படுத்தி வருவதால், pm 2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரளா மாநில வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பந்தலூர், தேவாலா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை உண்டு பொது மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா யானை, இதுவரை இரண்டு பேரின் உயிரை பறித்துள்ளது.இதனால் பந்தலூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த PM 2 காட்டு யானையை பிடிக்க வனத்துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.இந் நிலையில் 18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு , அரிசி ராஜா என்று அழைக்கபடும் Pm 2 மக்னா யானையை, 3 கும்கி யானைகள் உதவியுடன் 4 கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து மயக்க ஊசி செலுத்தி கடந்த மாதம் 8-ம் தேதி பிடித்தனர்.

இதன் பின்னர் அந்த யானையை லாரியில் கொண்டு சென்று முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகூர் வன பகுதியில் யானையின் கழுத்தில் ரோடியோ காலர் பொருத்தி விடபட்டது.

இதனை தொடர்ந்து அந்த யானை 2 நாட்களில் மசினகுடி வழியாக முதுமலை தெப்பக்காடு பகுதிக்கு சென்றது. பிறகு அங்கிருந்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதிக்கு சென்ற யானை, கேரளா எல்லை பகுதியில் முகாமிட்டிருந்தது.

இந்த நிலையில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்த pm 2 மக்னா யானை நேற்று முன் தினம் சாலையில் நடந்து சென்ற ஒருவரை தும்பிக்கையால் தூக்கி வீசியதில் அந்த நபர் காயமடைந்தார்.இதனால் குடியிருப்புகளின் அருகே முகாமிட்டு பொதுமக்களை தாக்கும் செயலில் ஈடுபடலாம் என அச்சத்தில் pm 2 மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கேரளா மாநில கேரள முதன்மை தலைமை வன பாதுகாவலர் உத்தரவிட்டார்.

மேலும் பத்தேரி ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் பொது மக்கள் இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.