நெல்லையப்பர் திருக்கோயிலில் 30 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லையப்பர் திருக்கோவிலில் அதிகளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, நெல்லையப்பர் திருக்கோவிலில் ஏற்கனவே தினசரி 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாகவும், 9 உற்சவங்கள் நடைபெறும் காலங்களில் மட்டும் 500 பக்தர்களுக்கு குறையாமல் அன்னதானம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், நெல்லைப்பர் கோயிலில் 30 கோடி ரூபாய் செலவில் மூத்த குடிமக்கள் உண்டு உறைவிட கட்டடம், யானைகளுக்கான திருக்குளம், பக்தர்கள் உடைமை பாதுகாப்புக்கான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: பங்களாவின் பொறுப்பு யாரிடம் இருந்தது? சசிகலாவிடம் விசாரணை
இதேபோல, சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய எம்எல்ஏ தளபதி, மதுரை வண்டியூர் கண்மாயை சுற்றுலாத் தலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், மதுரை வண்டியூர் கண்மாயைத் தூர்வாரி தரையினை அகலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும், கண்மாயின் மறுபக்கம் தீவு போன்ற 3 அமைப்புகள் உருவாக்கப்பட்டு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கண்மாயை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








